சில உணர்வுகளுக்குப் பெயர் தெரியவில்லை..
உள்ளத்தில் அவை, நிலைக்கொள்ளவில்லை..
பாரம் தாங்கமுடியவில்லை..
தாரமாய்
நீ வந்தால்,
இதயம் இறகாகுமடி
Tuesday, 28 November 2017
இறகு
வாழ்த்து
தொட்டதெல்லாம் துலங்க துணைபுரிய தோற்றுவித்தவனும்..
துவண்டு விடாமல், தோள் தர தோழமையும்..
உங்கள் புன்னகை, பல உள்ளங்களை மலர்ந்திடச்
செய்திடவும்,
என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்
Tuesday, 14 November 2017
Monday, 13 November 2017
ரயிலும், என் ரதியும்
ரயிலும், என் ரதியும் ஒன்றெனக் கண்டேன்,
காலம் தாழ்த்துவதிலும் சரி,
எனைக் காதல் கொள்ளச் செய்வதிலும் சரி,
படப்படத்தளிலும் சரி,
பரவசமாக்குவதிலும் சரி,
ரயிலும், என் ரதியும் ஒன்றெனக் கண்டேன்,
மலையில், ரயில் வளைகையில், அவள் அழகைக் கண்டேன்,
ரயிலின் அடி, அவள் கார்குழலின் அடியில் தவிடுபொடி என்பதில்
சற்று கர்வம் கொள்கிறேன்.
Sunday, 29 October 2017
Saturday, 28 October 2017
வருகிறேன்
எனை பார்க்கத் தயங்கும் கண்களைக்..காண
கவர்ந்திழுக்கும் இதழை இதமாக்க..
கவிதை படிக்கும், காவியத்தை நானும் படிக்க.. தொலைவானம் கடந்து, உன் தோள் நாடி வருகிறேன்..
குறும்பிழுக்கும் கைகளைக் கட்டி இழுத்து.. என்னோடு.. உன்னை அணைத்து, நெற்றி முத்தமிட, நெடு நாள் காத்திருந்து வருகிறேன்..
கண்களில் ஒழிந்திருக்கும் காதலைக் கட்டவிழ்த்து,
கரை ஒதுங்கும், கார்குழலில், எனை தொலைத்து, என்னை உன்னில் கண்டெடுக்க வருகிறேன்.... 👫
ஆசை மொத்தமும், முத்தமும்.. மெத்தையில் உன்னிடம்....
உன் மீசை வரையும், கொலங்கள் மொத்தமும் இந்த பெண்ணிடம்..
மேனியில் பனிபோல் படிந்து, மழைக் காணச் செய்கிறாய்..
கொடி போல் படர்ந்து, எனை குலையச் செய்கிறாய்..
நுனி மூக்கை வாளாக்கி, உனை வீழ்த்திடுவேன்..
நீ வீழாமல் இருக்க, என் வாழ்நாளை அர்ப்பணிப்பேன்
Friday, 22 September 2017
மலர்
உன் அன்பினால், என்னை அதிரச்செய்தாய்..
ஆயுள் முழுவதும் அதை உணரச்செய்வாயோ? ..
சமயங்களில், மெய் மறைத்து, மதி மயக்குகிறாய் ..
பொட்டல் காட்டில், பூந்தோட்டம் இட்டாய்..
மலர், மலர்ந்து மணம் வீசுதே..
மலரின் மண(ன) ம் மாறும் முன்னே, மணந்து கொள்வாயோ!!?
Wednesday, 20 September 2017
கலிகாலம்
வசதியை வைத்து தான் வாழ்க்கைத் துணை அமைகிறது பலருக்கு..
பணத்தை வைத்தால் பரந்தாமனைப் பக்கத்தில்
பார்க்க முடிகிறது..
பலபேருக்கு தெரிந்திருந்தால், அவன் பெரிய ஆள்.. அவன் குற்றவாளி ஆனாலும் கூட..
உச்சரிக்கும் உதடுகளில், உண்மை இருப்பதில்லை..
உள்ளத்தில் இருப்பது, உதட்டில் வருவதில்லை..
இன்னும் பல,..
கலியுகம்
Sunday, 10 September 2017
நீங்காதே
நீ.. நீங்கியதால்
விழிநீர் வற்றி,
நிலம் எல்லாம் குளமாகி போனதே,
கருநிற கறைக் கொண்ட குழல், கறை நீங்கி நரை கண்டதே.
நெஞ்சில் உதிரம் உறைந்து நின்றதே !!!
Monday, 4 September 2017
கண்ணானக் கண்ணே
Convex கண்ணாலே எனை கடத்தி தான் போனாயே
கண்ணோடு கண் பார்க்க சிறிது காலம் தான் தந்தாயே
மைவிழி பார்த்து, மெய் மறந்து போனேனே
Concave போட்டு தேடுகிறேன் எனை, உன்னுள்ளே
காட்டிக்கொடுத்தால், காலம் எல்லாம் கட்டிக்கொள்வேன் உனை என்னுள்ளே
Retina வில் உன் Reflection,
Refresh ஆனது என் நெஞ்சம்
Refraction இல்லாமல் தினந்தோறும் உன் பிம்பம், எனை distract செய்வது என் இன்பம்
Magnetic மலையும் நீ,
மெல்லிய சாரலும் நீயே ..
மேகமாய் எனை சூழ்ந்து மயக்கும் மோகமும் நீயே தீயே💕
Monday, 28 August 2017
தமிழ்
'இங்கிலீஷ்' தமிழ் மண்ணில் 'ஆங்கிலம்' என பெயர் மாற்றம் அடைந்துள்ளது.
நம் செந்தமிழ், எத்திசையிலும் ஒன்றென ஓங்கி ஒலிக்கிறது
Saturday, 12 August 2017
குமுறல்
கதிர் அறுப்போனை கதரச்செய்து விட்டு, காற்றில் பறந்து, பல காகித உடன்பாட்டாலும், உன் கருத்திலும், கணிப்பிலும் உடன்பாடில்லை.
அறுவடைக்கு நிலம் இல்லை,
அணுவுலைக்கு இடம் உண்டோ?
கதிர் விளையும் பூமியில், கதிர் வீச்சை விதைக்கிறாய்.
தனியாருக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறாய், இங்கு கண்ணீரோடு குரல் கொடுக்கும் எம் இனத்தோரை ஏமாற்றுகிறாய்.
எங்கள் மானியத்தை மறுக்கிறாய், உரிமையை நசுக்குகிறாய்.
நீ எம் அரசு தானா??
Thursday, 10 August 2017
உறவினும் உன்னதம்
நீ நிமிர்ந்து நிற்கும் போது, உன் நிழலில் வருபவர்கள்.. உனக்கு உறவென்றால்,
நீ நிலை தடுமாறிய போது, உனக்கு நிழலாய் இருப்பவர்கள்.. உயிரினும் உன்னதமானவர்கள்
விளக்கம்
புரிதல் இருக்கும் இடத்தில் உன் மௌனம் கூட பேசும்.
பரிவும், பகிர்வும் இல்லா இடத்தில் உன் விளக்கங்களும் ஊமையே ...
Wednesday, 9 August 2017
அலைப்பேசி அன்பு
உன் விழியின் வழியே வழிகின்ற நாணத்தை,
உன் மொழியின் வழியே நான் காண்கிறேன்..
அலைப்பேசி அன்பு 💕
Friday, 4 August 2017
நாடகம்
வசனங்களில் உண்மையில்லை.
அதில் துளியும் ஐயமில்லை.
காண்பதெல்லாம் கலப்படக்காட்சிகள் என்று, அன்று, கண்கள் அறியவில்லை.
இனியாவது, இனிதாகும் என்ற, என் எண்ணம் ஈடேறவில்லை.
காலம் கனியவில்லை, கனிந்தது கண்கள்.
காட்சிகளுக்கு இசையாய், என் இதயத்தின் விசும்பல்கள்.
நட்பெற்ற பெயரில்
நடந்தேறியது, நல்லதொரு நாடகமே, முற்றும்.
Sunday, 30 July 2017
தோனி
எதிர்நீச்சலிட்டு வானுயர்ந்தாய் ,
பந்தால் விந்தைச் செய்து, எதிரணியினரைப் பந்தாடினாய்..
மட்டையால் பல பட்டங்களை விட்டு,
எதிர்பார்ப்பின்.,ஏகாதிபதி ஆனாய்..
கோப்பைகளைக் குவித்து,
வரலாறு படைத்தாய்.. சகாக்களிடம் சமமாய் இருந்து சகாப்தம் புரிந்தாய்..
நிலைதடுமாறிய வேளையிலும், நிறைவேறிய தருணத்திலும், நிதானமாய் நின்றாய்.. களத்தில்..,.
நிமிர்ந்து நின்றாய்,
எங்கள் நெஞ்சத்தில்...
Saturday, 29 July 2017
இடதுசாரி பெண்ணே
ஹே இடதுசாரி பெண்ணே..
நான் இதமாய் சரிகிறேனே..
இதயத்தில் இடம் தந்தால், இமயம் போல் கரைந்திடுவனே.
வேண்டாமென்றச் சொல், சொல்லும் முன்னே..
என் மனதின் வார்த்தைகளை, என் கண்ணில் காணாய் கண்ணே..
நீ விடைபெறும் முன்னே..
Friday, 28 July 2017
தோழமை
அறம் அறிந்து, நெறி படுத்தும் தோழமை நீ..
தடுமாறும் நேரத்தில், நிகர் நின்று நெகிழச் செய்யும், நெஞ்சம் நீ..
என் சிந்தனைகளுக்குச் சுவாசம் நீ..
பதறும் வேளையில், என் பலம் நீ..
மனம் சிரித்திட செய்யும் துணை நீ..
இன்பத்திலும், இன்னலிலும் என்னோடு இருக்கும் துலாபாரம் நீ..
நல்லதொரு நிறைவான நட்பு நீ - என்றென்றும்
Tuesday, 18 July 2017
குட்டிக் கவிதை
கோபத்தை விழியின் விளிம்பில் விதைத்து,
சிரிப்பை உதட்டின்
ஓரத்தில் புதைத்து,
நான் காண, நாணம் கொண்டாள். அதை நயமாய் மறைத்தாள், என் குட்டிக் கவிதை
Monday, 17 July 2017
ஐந்து உணர்வுகளும் நீ அன்பே
நீ, பாராமுகமாய் இருந்தாலும் உன்னை பார்ப்பதில் பரவசமே..
நீ, கேட்காவிட்டாலும்,
அன்பைத் தருவதில் எனக்குத் தனி சுகமே..
நீ பேசாவிட்டாலும், உன் மௌனத்தை மொழி்பெயர்ப்பேன்..
என்றேனும் உணர்வாய், நீ, தான், எந்தன் உயிர் சுவாசம் என்று
விழி நீர்
உள்ளம் சிறுத்த மனிதர்களால்,
உந்தன் பெருவிழி கனத்து கரைவதேனடி!!!
கரைந்து கருந்நீராய் கன்னத்தில் விரிவதேனடி!!
உலர்ந்த நீர் உணர்த்தியது உறவுகளின் உண்மை நிறத்தை
Saturday, 15 July 2017
குழந்தைப் பரிதாபங்கள்
"கைவீசம்மா" பாடல் உரைக்க வேண்டிய வயதில்
"கைப்பேசி"யோடு உறவாடல்.
விளையாட்டு வியர்வையில் நனைந்த காலம் போய்,
குளிர்சாதன அறையில் ஓர் தேடல்.
குழந்தைப் பரிதாபங்கள்.
Wednesday, 12 July 2017
இதய பரிமாற்றம்
கருவிழியில் ஊடுருவி, கண்மணியாள், என் வழி எங்கும் ஒளி ஆனாள்.
நாசிவழி, சுவாசமாய் , உள்நுழைந்து, என் உயிரில் வாசம் கொண்டாள்.
நல் மனதால் மயக்கி-என்தன் தீராக்காதலுக்கு
மாமருந்தாய் இதய(பரி)மாற்றம் நிகழ்த்தினாள்
Monday, 10 July 2017
Life
Life, at sometimes, is a serious series, Where smile is a short cut to face it.
Life will be a boat in still water
Where as, our wishes are stranded in mid sea
Profit or Loss, Our happiness shouldn't be nullified
Saturday, 8 July 2017
பாடல் என் பைங்கிளிக்கு
இப்போது சொல்லாத மெய்யான வார்த்தைகள், பின் எப்போதும் சொல்லாமல் போகும் சோகம்.. பிற்பாடு வாழ்க்கையில் வேண்டாம் கண்ணே...
எப்பாடுப் பட்டாலும்,உன்னை பற்றாமல் விடமாட்டேன், எந்தன் பெண்ணே...
ஒட்டாமல் உறவாடும் எந்தன் விரல்கள், உன்னோடு தான் கோர்க்கும் அனைவர் முன்னே... 👫
Sunday, 2 July 2017
Thursday, 22 June 2017
நினைவு பெட்டகம்
இந்நாள் நிகழ்வுகள்
ஓர் நாள் நம் நினைவுகள்
நினைவுகளை நிதானமாய், நினைத்தாட நேரமில்லா நிகழ்காலம்..
நேரங்கள் கரைந்தோடியப் பின்
நினைவுகளும், நாமும் பெட்டகத்தில்.
Tuesday, 20 June 2017
பெண் பால்
சீம்பால் சொல்லழகி (குழந்தையின் மழலைச்சொல்)
பாலாடைக் கட்டி வந்த பேரழகி (மங்கை)
பக்குவமான பாரழகி (மடந்தை)
சுண்ட காய்சிட சிவந்தழகி (அரிவை)
சீக்கிரம் ஆரும் சினத்தழகி
அன்பை அரிதாரமாய் அணிந்த அமுதழகி (தெரிவை - தயிர்)
அகம் குளிர மருந்தளிக்கும் குணத்தழகி (பேரிளம் பெண் - மோர்)
வெண்மையை விரும்பும் வெண்பாழகி (அமைதி விரும்பி - கண்ணன் விரும்பிய வெண்ணை)
மனம் நெகிழ, மணம் வீசும் மெய்யழகி (மலர் போன்ற பெண்மை- நெய்)
தன் நிலை மாறினும்.. தரம் மாறாது
பெண்ணும்.. வெண்பாலும். பெண்பால்.
Sunday, 18 June 2017
என் மனம் நீ
மனதுடன் பிணைந்த மணம் நீ..
மாங்கல்யம் இட்டு இணைந்த துணை நீ
திங்களுக்குத் திலகம் இட்ட ஞாயிறு நீ..
இயல்பினும் இனியவன் நீ.
Tuesday, 13 June 2017
நிஜம் எது
உண்ண உணவு உண்டு
உடுத்திட உடை உண்டு
உறங்க உறைவிடம் உண்டு
உரையாட உற்றார் உண்டு
உண்மையாய் உழைத்திட வழி உண்டு .
உளமார சிரித்திட,உன்னத உறவுகள் இங்கில்லை
பகிர்வு செய்திட, பிரியமுடைய தோழன் பக்கத்தில் இல்லை,
முகவாட்டத்தை கலைக்க, வாண்டுகள் அருகினில் இல்லை,
நினைப்பதை நிறைவேற்றும்,என் நிலையானவள் நினைவாய் நான் இங்கே..
கோடி கொடுப்பினும், கிடைக்கப் பெறா தாய் மடி அங்கே...
நினைவுகளின் நிழல்கள் கொண்டு, நிஜத்தில் வாழ்கிறேன்..
Saturday, 10 June 2017
இதல்லவா வாழ்க்கை
அடித்தெழுப்பும் அலாரம் தேவை இல்லை..
அன்பாய் 'ம்மா' என்று துள்ளி வரும் கன்றின் குரலே போதும்,
காலை பகலவனை நாம் காண..
மிதமிஞ்சி கிட்டும் பால்,
அது பொங்கி வரும் வேளையில் ஓர் நறுமணம்...
அதை வாசம் பிடிக்க, நம் நாசித்துவாரம், தவம் கிடக்கும்..
கஞ்சிக் கொஞ்சம் கிடைத்தாலும், மனமாரப் பருகிச் சென்றோம்..
'மைல்' கணக்கில் இருந்தாலும்..
மணி கணக்கில் நடந்து செல்வோம்.. 😊
சோர்வென்று சொங்கிப் போனதில்லை..
வெயில் என்று வயக்காட்டை விட்டுச் சென்றதில்லை..
விளையாட்டுக்கு முற்று வைத்ததில்லை....
குளிர் காய, குளம் அது போதும்..
இளைப்பாற மரநிழலது போதும்..
சிரித்தாட ஆலமர விழுது போதும்..
வீடுத்திரும்பும் நேரத்தை விட்டில் பூச்சி
நினைவூட்டும்...
வீடைந்ததும் விட்டத்தில் பாயிட்டு, வீசும் காற்று தாலாட்ட கண்கள் அயரும்... அடுத்த நாளை எதிர்நோக்கி.....
Monday, 5 June 2017
மனமே
கரைவதை மறைக்கிறேன்.
மறைப்பதை மறுக்கிறேன்.
நினைப்பதை நிறுத்த நினைத்தும்,
நில்லாமல், மனம் உன்னை சேர்கிறதே
Sunday, 4 June 2017
காலம் தாண்டியும்
இறந்தாலும் இருப்பேன் - உயிர்
பிரிந்தாலும் பிறப்பேன்-பாரில்
மறைந்தாலும் மணப்பேன்-உடல்
அழிந்தாலும், வான் அளப்பேன்-இறக்கை
ஒடிந்தாலும் ஒடுங்கமாட்டேன் - எவர்
ஓதினாலும் ஓயமாட்டேன்-கலையில்
கலந்ததால் காலம் தாண்டியும் வாழ்வேன்.
Tuesday, 30 May 2017
வரலாறு
வரலாறு- படைக்கப்பட்டது ஒன்று..
படைப்பில் வேரொன்று..
மண்ணின் மரபு ஒன்று..
மறைத்து மாற்றியது வேரொன்றாய்..
வரலாறு, திருத்தப்படவில்லை..
திருடப்பட்டுள்ளது, நம்மிடம் திணிக்கப்பட்டுள்ளது.
Saturday, 27 May 2017
ரசனை
நடுபகலில் ஞாயிறோடு சண்டையிட்டு வெல்லும் கருமேகக் கூட்டங்களும்,.. மண் வாசனையும்..
பசி அணைக்கும் வேளையில் அமிர்தமாய் கிட்டும் ஒரு பிடி உணவும்..
படி ஏறி, இறங்க குதிக்கால்களில் குதித்தாடும் கொலுசின் ஓசையும்..
சூரியனை ஏமாற்றி இலைகளின் இடுக்கில் மறைந்தாடும் பனித்துளியும்..
இசையின் அதிர்வலைகளில், அழகாய் ஆடும் வீணை நரம்புகளும்..
சொர்க வாழ்வுதனை இம்மையில் உணர வைக்கும் அன்னையின் மடியும்..
இந்த பிறவிதனில் ரசனையோடு ரசிக்க வல்லது.. 😊
Wednesday, 24 May 2017
தோழி
எனது ஓர் பிறவியில், உனை இருமுறை பிரிவதேனடி தோழி,
நீ எத்துருவத்திலிருந்தாலும், என் துருவநட்சத்திரம் நீயடி..
அருகில் இருக்கையில், நம் இருக்கையில் நாம் இல்லை..
இருக்கையால் வான் வளைத்தோம்..
இன்று உன் இன்மையை உணர்கிறேன்.
உன் வெறுப்பிலும், ஓர் விருப்பம் தெரியுதே
உன் கோவத்திலும், ஒரு குழந்தை சிரிக்குதே
உன் அக்னி பார்வையில், அன்பு மலருதே💕
Saturday, 13 May 2017
நுண்ணொலி
மாலை வேளை
அமைதி கவ்விய சாலை..
காதோரத்தில், காற்றின் பரபரப்பில்
தெற்கு வடக்காய் அலைபாயும் செவிப்பூவும்,
அப்பூவின் அரும்புகளாய்,
பூத்திருக்கும் மணிகளின் ஓசையும்...
மாம்பிஞ்சுக் கொலுசும்,
அதில் விளையாடும்..
முத்துக்களின் ரம்மியமான ஒலியும்..
அமைதி அலங்கரித்த சாலையை..
தன் நுண்ணொலியால் நிரப்பியது
Saturday, 29 April 2017
நட்பில் பிரிவு
உயிர் நட்பென்று வாய் வழி மட்டுமே உரைத்து..
உண்மை அற்ற, உறவாய் வழிநெடுக்க வந்து,
உணர்வுகளை உதாசீனப்படுத்தி, வலி தந்து ..
குற்றமற்ற நட்பை குறைக் கூறி செல்வதற்கு, மனம் வந்தது உனக்கு..
மனம் நொந்தது எனக்கு..
வலியிலும், ஓர் வழி பிறந்தது...
இந்த வாக்கியமாய்.....
- பிரியா கே. ஜி. எம்
Thursday, 13 April 2017
செம்மொழி
பிற மொழி பயிலும் முனைப்பில்
தமிழ் மொழி மறவாதே!!!
நொடி பொழுதில் பழமை பெறும்
தொழில்நுட்பம்....!
நெடுங்காலமாய், நிறைவாய்.. நயத்துடன் நிலைத்திருக்கும்
தமிழின் நுட்பம்..!!
அறிவையும், ஆளுமையையும் ஆழமாய் செவ்வனே பதியச் செய்வது எம்மொழி.. (புறநானூறு)
அன்பையும் , பண்பையும் அழகாய் ஆழ்மனத்தில்
விதைக்கவல்லது செம்மொழி..
(அகநானூறு)
பிறமொழியில் தமிழின் ஆதிக்கம் இருக்கும்..
கொஞ்சிடும் தமிழில் இன்பம் என்றும் நிறைந்து இருக்கும்!! 🌹
Saturday, 8 April 2017
பிரியாவிடைப் பரிசு
நினைத்ததை நினைத்தபடி
நித்தம் செய்து
நின் வாழ்க்கையில்
நிமிர்ந்து நின்று
நிலையான பலவற்றைப்
பெற்று, நிம்மதியாய்...
உன் மதியாய், உன்தன்
வாழ்வில் வளம் சேர்த்து..
வலம் வரப்போகும், மதியுடன்
பகலவனாய் பிரகாசிக்க
வாழ்த்துகிறேன்
Saturday, 25 March 2017
எங்கே போகிறோம்
உலகினில் உயிரைத் தோற்றுவிக்கும் மண்ணின் வளத்தை,. ஆராய்ச்சியின், அரிதாரம் பூசி.. அதன் மகத்துவத்தை அழித்து விட்டு..
புரட்சி செய்து, வளர்ச்சி அடைந்துவிட்டோம்.. என்று பிதற்று்கின்றோம் .
அதே போல் தான் மனித இனமும்.. அறிவியல்
மலர்ச்சி என்னும் பெயரில்.
தன் மரபையும் , மாண்பையும் துறந்து .. உறவுகளை மறந்து..
காகிதத்தின் பின்னால் பறந்து கொண்டு இருக்கிறோம்.
Tuesday, 21 March 2017
விவசாயம்
நீலவானம் பொய்தது.
நிலங்கள் நீரின்றி கருகின.
கதறுவோரை கண்டுக் கொள்ள, கடமை உணர்ந்த அரசும் இல்லை.
காலம் தாழ்த்தினும், கைக்கோர்க்க, தடை தகர்ந்து ஓடி வரும் ஆறுகள்.
ஆனால் அணைப் போட்டு அரசியல் செய்யும் மாக்கள்.
இந்நிலை தொடரின்..
விளைச்சல் வீழ்ந்து .. விலை உயர்ந்து விண்ணை எட்டும்.
இதை சமன் செய்ய,அயல் நாட்டிடம் அடிபணிய வேண்டிருக்கும்
Friday, 10 March 2017
காற்று வெளியிடை
காற்றின் 🌪பின்னால் குடை ☂பறந்தது...
குடையின் ☂பின்னால் கொடி 👸🏻பறந்தாள்..
கொடியினால்👸🏻 இந்த குடியவன்👑 மெய் மறந்தான்..
Monday, 6 March 2017
பெண்
மென்மை - பெண்மையின் மேன்மைகளில் ஒன்று
நாணம் - அவள் மொழிகளில் ஒன்று
அமைதி - அவள் ஆயுதத்தில் ஒன்று
தியாகம் - அவள் அன்னை என்பதின் சான்று
Monday, 20 February 2017
ஊடல்
உன் வெறுப்பிலும், ஓர் விருப்பம் தெரியுதே
உன் கோவத்திலும், ஒரு குழந்தை சிரிக்குதே
உன் அக்னி பார்வையில், அன்பு மலருதே💕
Friday, 17 February 2017
Sunday, 5 February 2017
Thursday, 26 January 2017
முதலில் இருந்து
மறக்க நினைத்த நொடி,
என் மனதில் பூத்த மலர்க்கொடி..
கொடி காற்றின் திசையில் ஆடும்.. மனமோ உன்னை தேடி போகும்.. இதுவே இறுதி என்று நினைக்கையில், முளையில் இருந்து வருகிறாய்..
Friday, 20 January 2017
வேர் அறுப்போம்
நாம் வாழ, பிறர் சாக.. இதை எத்தனை ஆண்டுகள் பார்த்திருப்போம்,
கண்டும் காணாதிருந்த முதலைகளை களை எடுப்போம்,
இராண்டாகினும், நான்காண்டாகிணும், அவைகளை வேர் அறுப்போம்,
காளையின் திமிலை மட்டும் அல்ல
பலரின் திமிரையும் அடக்குவான் தமிழன்.
அந்நியரை அனுமதிப்பதும், அவதிபடுவதும், அமைதி காப்பதும், அல்லல் படுவதும் இனி அறவே வேண்டாம்.
தனித்தனியாக வந்தோம்,
ஓர் அணியாய் உருவெடுத்தோம், அரசியல் கட்சிகளை ஆட்டம் காணச் செய்தோம்.
அறத்தினை விதைத்திடுவோம், ஆணிவேர் என்றாகிடுவோம்.. சலசலப்பிற்கு இடமில்லாமல்,
பல சகாப்தம் புரிந்திடுவோம்