இந்நாள் நிகழ்வுகள்
ஓர் நாள் நம் நினைவுகள்
நினைவுகளை நிதானமாய், நினைத்தாட நேரமில்லா நிகழ்காலம்..
நேரங்கள் கரைந்தோடியப் பின்
நினைவுகளும், நாமும் பெட்டகத்தில்.
Thursday, 22 June 2017
நினைவு பெட்டகம்
Tuesday, 20 June 2017
பெண் பால்
சீம்பால் சொல்லழகி (குழந்தையின் மழலைச்சொல்)
பாலாடைக் கட்டி வந்த பேரழகி (மங்கை)
பக்குவமான பாரழகி (மடந்தை)
சுண்ட காய்சிட சிவந்தழகி (அரிவை)
சீக்கிரம் ஆரும் சினத்தழகி
அன்பை அரிதாரமாய் அணிந்த அமுதழகி (தெரிவை - தயிர்)
அகம் குளிர மருந்தளிக்கும் குணத்தழகி (பேரிளம் பெண் - மோர்)
வெண்மையை விரும்பும் வெண்பாழகி (அமைதி விரும்பி - கண்ணன் விரும்பிய வெண்ணை)
மனம் நெகிழ, மணம் வீசும் மெய்யழகி (மலர் போன்ற பெண்மை- நெய்)
தன் நிலை மாறினும்.. தரம் மாறாது
பெண்ணும்.. வெண்பாலும். பெண்பால்.
Sunday, 18 June 2017
என் மனம் நீ
மனதுடன் பிணைந்த மணம் நீ..
மாங்கல்யம் இட்டு இணைந்த துணை நீ
திங்களுக்குத் திலகம் இட்ட ஞாயிறு நீ..
இயல்பினும் இனியவன் நீ.
Tuesday, 13 June 2017
நிஜம் எது
உண்ண உணவு உண்டு
உடுத்திட உடை உண்டு
உறங்க உறைவிடம் உண்டு
உரையாட உற்றார் உண்டு
உண்மையாய் உழைத்திட வழி உண்டு .
உளமார சிரித்திட,உன்னத உறவுகள் இங்கில்லை
பகிர்வு செய்திட, பிரியமுடைய தோழன் பக்கத்தில் இல்லை,
முகவாட்டத்தை கலைக்க, வாண்டுகள் அருகினில் இல்லை,
நினைப்பதை நிறைவேற்றும்,என் நிலையானவள் நினைவாய் நான் இங்கே..
கோடி கொடுப்பினும், கிடைக்கப் பெறா தாய் மடி அங்கே...
நினைவுகளின் நிழல்கள் கொண்டு, நிஜத்தில் வாழ்கிறேன்..
Saturday, 10 June 2017
இதல்லவா வாழ்க்கை
அடித்தெழுப்பும் அலாரம் தேவை இல்லை..
அன்பாய் 'ம்மா' என்று துள்ளி வரும் கன்றின் குரலே போதும்,
காலை பகலவனை நாம் காண..
மிதமிஞ்சி கிட்டும் பால்,
அது பொங்கி வரும் வேளையில் ஓர் நறுமணம்...
அதை வாசம் பிடிக்க, நம் நாசித்துவாரம், தவம் கிடக்கும்..
கஞ்சிக் கொஞ்சம் கிடைத்தாலும், மனமாரப் பருகிச் சென்றோம்..
'மைல்' கணக்கில் இருந்தாலும்..
மணி கணக்கில் நடந்து செல்வோம்.. 😊
சோர்வென்று சொங்கிப் போனதில்லை..
வெயில் என்று வயக்காட்டை விட்டுச் சென்றதில்லை..
விளையாட்டுக்கு முற்று வைத்ததில்லை....
குளிர் காய, குளம் அது போதும்..
இளைப்பாற மரநிழலது போதும்..
சிரித்தாட ஆலமர விழுது போதும்..
வீடுத்திரும்பும் நேரத்தை விட்டில் பூச்சி
நினைவூட்டும்...
வீடைந்ததும் விட்டத்தில் பாயிட்டு, வீசும் காற்று தாலாட்ட கண்கள் அயரும்... அடுத்த நாளை எதிர்நோக்கி.....
Monday, 5 June 2017
மனமே
கரைவதை மறைக்கிறேன்.
மறைப்பதை மறுக்கிறேன்.
நினைப்பதை நிறுத்த நினைத்தும்,
நில்லாமல், மனம் உன்னை சேர்கிறதே
Sunday, 4 June 2017
காலம் தாண்டியும்
இறந்தாலும் இருப்பேன் - உயிர்
பிரிந்தாலும் பிறப்பேன்-பாரில்
மறைந்தாலும் மணப்பேன்-உடல்
அழிந்தாலும், வான் அளப்பேன்-இறக்கை
ஒடிந்தாலும் ஒடுங்கமாட்டேன் - எவர்
ஓதினாலும் ஓயமாட்டேன்-கலையில்
கலந்ததால் காலம் தாண்டியும் வாழ்வேன்.